Sunday, September 27, 2009

என் மகன் பிறந்த தினம்

10-செப்டம்பர்-2009 இரவு 10.25 என் மகன் பிறந்த அந்த தருணம் என் வாழ்வின் இனிமையான, என்னை வாழ்கையின் வேறு ஒரு இடத்திற்கு எடுத்து சென்ற, உணர்ச்சி மிகுந்த ஒரு பரவசமான தருணமாக அமைந்தது.

ஒரு மனிதன் தன் நிலையை, தன் மாற்றத்தை நினைக்கும் அல்லது உணர்த்தும் நிகழ்வுகளாக ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து போகும் நிகழ்வுகளாக, பள்ளி பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் நேரம், முதல் மாத சம்பளம், திருமணம், தந்தை யாக என ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொன்றும் நம்முடைய வயதை, கடந்துவந்த பருவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிகளாக அமைகிறது.


அது போல், என்னுடைய குழந்தையை கையில் எடுத்து பார்த்தபோது உள்ளம் முழுவதும் மகிழ்ச்சியோடு, அவனின் எல்லா தேவைக்கும், அவனை நல்ல ஒரு மனிதனாக, நல்ல எண்ணங்களை, மனிதர்களை, புத்தகங்களை தேடும் ஒரு ஆர்வலனாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும், உறுதியும் என்னுள் வளர்ந்தது. இந்த ஒரு எண்ணம் என்னை ஒரு புது மனிதனாக, புதிய ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்வதை உணர்ந்தேன். ஆம், என்னுள் நான் புதிதாக வளர்ந்ததாக உணர்ந்தேன்!


அழுகை குரலோடு தன்னை உலகுக்கு தெரிவித்து ஆர்வத்தோடு எல்லோரையும் பார்க்க வந்த நேரம் சரியாக இரவு 10.25


முதன் முதலில் குழந்தையை பார்த்த போது எல்லோர் முகத்திலும் சந்தோஷம், நல்ல முறையில் பிறந்தது என்ற நிம்மதியும், மகிழ்ச்சியும் என் மனைவி முகத்தில்.
மொத்தத்தில் எங்கள் குடும்பத்திற்கு இந்த நாள் ஒரு இனிமையான, மறக்க முடியாத இன்பமான நாளாக அமைந்தது.


ஆண் பிறந்தால் "இளந்திரயன்" என்றும் பெண் பிறந்தால் "ஓவியா" என்றும் நினைத்திருந்த எங்களுக்கு, இளந்திரயன் வந்து இனிமை தந்தான்.

மொத்தத்தில் குடும்பத்தில் ஒரு புது வரவு எல்லோரையும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும் ஆழ்த்தியது...

No comments: